நட்பாகத் தொடர்பவர்கள்

சனி, 26 ஜனவரி, 2013

THIRUVILAKKU POOJAI.....திருவிளக்கு பூஜை


மங்கலப் பொருளாம் விளக்கிதுவே
மாதர் ஏற்றும் விளக்கிதுவே
விளக்கில் ஏற்றும் ஜோதியினால்
விளங்காப் பொருளும் துலங்கிடுமே
விளக்கில் விளங்கும் ஜோதிதனை
விமலை என்றே உணர்ந்திடுவோம்.
புற இருளை மட்டும் அல்லாது அக இருளையும் நீக்க வல்லது திருவிளக்கு வழிபாடு. தினந்தோறும் காலை மாலை இருவேளையும் தீபமேற்றி வழிபடுவது நம் சம்பிரதாயம். 

தை மற்றும் ஆடி வெள்ளிக்கிழமைகளில் திருக்கோவில்களில்  1008, 108, என்ற எண்ணிக்கையில் திருவிளக்கு பூஜைகள் செய்து கூட்டு வழிபாடு செய்வது வழக்கத்தில் உள்ளது.

விளக்கினை ஏற்றி ஒளியை அறிமின், விளக்கின் முன்னே வேதனை மாறும் என்று திருமந்திரம் போற்றுகிறது. ஆலயங்களில் பலர் கூடிச் செய்யும் திருவிளக்கு வழிபாடு, மந்திர பூர்வமாகச் செய்யும் வேள்வி செய்வதற்குச் சமம்.

வெள்ளிக்கிழமைகள் மட்டுமல்லாது, சந்திரபகவான் தம் அம்ருத ஒளியைப் பிரவகிக்கச் செய்கிற பௌர்ணமி தினம், மற்றும், சந்திர சூரியர்கள் நேர்க்கோட்டில் சந்திக்கிற அமாவாசை தினம் ஆகியவற்றில் திருவிளக்கு வழிபாடு செய்வது விசேஷப் பலன்களைக் கொடுக்க வல்லது.
ஒவ்வொரு மாத பௌர்ணமி, அமாவாசை தினங்களில் திருவிளக்கு பூஜை செய்வதற்கான பலன்கள்.
  • சித்திரை பௌர்ணமி மற்றும் அமாவாசை -தான்ய விருத்தி ஏற்படும்.
  • வைகாசி பௌர்ணமி மற்றும் அமாவாசை -செல்வம் உண்டாகும்.
  • ஆனி பௌர்ணமி மற்றும் அமாவாசை  -திருமணத் தடை நீங்கும்.
  • ஆடி பௌர்ணமி மற்றும் அமாவாசை -ஆயுள்விருத்தி உண்டாகும்.
  • ஆவணி பௌர்ணமி மற்றும் அமாவாசை- புத்திரபாக்கியம் கிட்டும்.
  • புரட்டாசி பௌர்ணமி மற்றும் அமாவாசை -பசுக்கள் விருத்தியாகும்
  • ஐப்பசி பௌர்ணமி மற்றும் அமாவாசை -தீராத நோய் நீங்கும்.
  • கார்த்திகை பௌர்ணமி மற்றும் அமாவாசை -முக்தி கிட்டும்.
  • மார்கழி பௌர்ணமி மற்றும் அமாவாசை -ஆரோக்கியம் நிலைக்கும்.
  • தை பௌர்ணமி மற்றும் அமாவாசை- எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும்.
  • மாசி பௌர்ணமி மற்றும் அமாவாசை -துன்பம் நீங்கும்.
  • பங்குனி பௌர்ணமி மற்றும் அமாவாசை - தர்மசிந்தனை மேலோங்கும்.
கூட்டுப் பிரார்த்தனை செய்வதன் மூலம் மேற்கண்ட பலன்கள் பன்மடங்கு பெருகும் என்பது உறுதி.

நம் இல்லத்திலும் எங்கும் நிறைகிற இறையொளியை தீபத்தில் எழுந்தருளச் செய்து, பூஜித்து வழிபடலாம். தீபத்தில் எழுந்தருளுகிற சுடரை, தீபலெக்ஷ்மி என்றே வழிபடுவது நமது வழக்கம். தீபமேற்றும் வேளையில், நல்ல எண்ணங்களோடு, நமக்குத் தெரிந்த துதிகளைக் கூறிக் கொண்டே விளக்கேற்றுவது நல்லது. 
இல்லத்தில், திருவிளக்கு பூஜை செய்ய வேண்டுவோர், கீழ்க்காணும் விதிகளைத் தெரிந்து கொள்வது நல்லது.
  • நெய்யூற்றி விளக்கேற்றுவதால் சகல செல்வங்களும் பெறலாம். நல்லெண்ணை, ஆமணக்கெண்ணை முதலியவை உபயோகித்து விளக்கேற்றுவதால், துன்பங்கள் விலகி, சகல சுகங்களும் பெறலாம்.
  • குலதெய்வத்திற்கு முக்கூட்டு எண்ணை(வேப்பெண்ணை, இலுப்பை எண்ணை, பசுநெய் மூன்றும் கலந்தது) ஊற்றி விளக்கேற்றுவது சிறந்தது.
  • வாழைத்தண்டின் நாரினால் திரி திரித்து விளக்கேற்ற பித்ரு தோஷம் நீங்கும். பஞ்சுத் திரி நலமெல்லாம் நல்கும். தாமரைத் தண்டுத் திரி செல்வம் பெருக்கும். வெள்ளை எருக்கம் இலைப்பட்டையைத் திரியாகப் பயன்படுத்த, நிறைந்த செல்வம் ஏற்படும். புது, மஞ்சள் துணியைக் கத்தரித்து, திரியாகப் பயன்படுத்த அம்பிகையின் அருட்பிரவாகத்தை உணரலாம். அதே போல், சிவப்பு நிறத் துணியைத் திரியாகப் பயன்படுத்த, திருமணத் தடங்கல் நீங்கும்.
  • வெள்ளைத் துணியின் மீது பன்னீர் ஊற்றிக் காய வைத்து, அதைத் திரியாகக் கத்தரித்து உபயோகிக்க, வேண்டும் விருப்பம் அனைத்தும் ஈடேறக் காணலாம்.
  • தெற்குத் திசை தவிர மற்றத் திசை நோக்கி விளக்கேற்றலாம்.
  • ஒரு முகம் தீபமேற்ற மத்திமப்பலன் கிட்டும். இருமுகம், குடும்ப ஒற்றுமையைப் பெருக்கும், மூன்று முகம் விளக்கேற்ற புத்திரபாக்கியம் கிடைக்கும். நான்கு முகம் ஏற்ற, நிலம், செல்வம் முதலியவை கிட்டும்.
  • ஐந்து முக தீபம், கருவறையிலிருக்கும் தெய்வ சாந்நித்யத்தைக் கொண்டு வரும் ஆகவே, விளக்கு பூஜை செய்ய ஐந்து முக தீபமேற்றி அதில் அம்பிகையை ஆவாஹனம் செய்வதே சிறந்தது.
  • விளக்கை ஆண்கள் ஏற்றலாம். ஆனால் அதை வளர்த்து விடும் (தீபத்தை அணைக்க என்று சொல்லக் கூடாது) உரிமை பெண்களுக்கே. கையால் வீசியும், காற்றை வாயால் ஊதியும் தீபத்தை வளர்த்துவிடக் கூடாது. பூவால் ஜோதியை ஒற்றி வளர்த்துவிட வேண்டும். திரியை உள்ளிழுத்தும் செய்யலாம்.
  • திரியைக் கையால் தூண்டி விடக் கூடாது.
  • எவர்சில்வர் விளக்குகள், உடைந்த, ஒட்ட வைத்த விளக்குகள் தவிர்க்கவும்.
  • விளக்கு ஏற்றி, பூஜை ஆரம்பித்த பிறகு, நடுநடுவே எண்ணை ஊற்றுவதைத் தவிர்ப்பது நலம். ஆகவே அதற்கேற்றபடி, நடுவில் கொஞ்சம் குழிவாக,  எண்ணை பிடிக்கும்படியான விளக்குகள் சிறந்தது.
  • குத்துவிளக்கை பூஜைக்கு உபயோகப்படுத்துவதே சிறந்தது.
பூஜை ஆரம்பிக்கும் முன்:
  • பூஜைக்குத் தேவையான பொருட்களைச் சேகரித்துக் கொண்டு, நிவேதனங்களைத் தயார் செய்து கொண்ட பின்பே பூஜைக்கு அமரவும்.
  • சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்வது நல்லது. வேண்டும் பிற நிவேதனங்களும் செய்யலாம்.
  • திருவிளக்கு பூஜைக்கு, விளக்கை கிழக்கு முகமாக ஏற்றுவதே சிறந்தது. பூஜிப்பவர், வடக்கு நோக்கி அமர்ந்து பூஜிக்கவும்.
  • வாழை இலையில் அரிசியை சதுரமாகப் பரப்பி அதன் மேல் திருவிளக்கை இட்டு பூஜிப்பது சிறந்தது. இலையின் நுனி, விளக்குக்கு இடப்புறம், வடக்கு நோக்கி இருக்க வேண்டும். சிறிய தாம்பாளத்தட்டிலும் அரிசியைப் பரப்பி அதன் மேல் விளக்கை இட்டு பூஜிக்கலாம். திருவிளக்கின் கீழிருக்கும் அரிசியை, மறுநாள்  வீட்டுக்கு உபயோகிக்கலாம்.
  • மாக்கோலமிட்டு அதன் மேல் வாழை இலையை வைப்பது சிறந்தது.
  • பூஜிப்பவர், சிறு மணை அல்லது விரிப்பில் அமர்ந்து தான் பூஜை செய்ய வேண்டும்.
  • பூஜிக்கும் விளக்கிற்கு அருகில் ஒரு சிறு விளக்கை ஏற்றி வைக்கவும். அதிலிருந்து தான், ஊதுபத்தி,கற்பூரம் முதலியவை ஏற்ற வேண்டும். பூஜை செய்யும் விளக்கை அதற்கு உபயோகிக்கக் கூடாது.
  • பூஜை செய்யும் போது நடுவில் எழுந்திருக்கக்கூடாது.
  • பூஜை செய்யும் விளக்கைச் சுத்தம் செய்து, பொட்டு வைத்து, தண்டுப்பாகத்தில், பூ சூட்டி பூஜையில் வைக்கவும். விளக்கின் அடிப்பகுதியில், அம்பிகையின் பாதங்களைக் குறிக்கும் விதமாக, இரண்டு பொட்டுக்கள் வைக்கவும்.
  • எண்ணை ஊற்றி அதன் பின்பே திரியைப் போடவேண்டும்.
  • பூஜைக்குப் புதுத் திரிகளையே உபயோகிக்க வேண்டும். தினந்தோறும் விளக்கேற்றும் போதும், புதுத் திரிகளை உபயோகிப்பதே சிறந்தது.
  • குங்குமம், அட்சதை, மலர்கள் ஆகியவற்றால் அர்ச்சிக்கலாம்.
  • பூஜை முடியும் வரை, விளக்கு ஆடக் கூடாது. ஆகவே, சற்று தாராளமாக அரிசி போட்டு, விளக்கை சரியாக வைக்கவும். சற்று கெட்டித் திரியாகப் போட்டால், பூஜை முடியும் வரை சுடர்கள் அலைபாயாமல் இருக்கும்.
பூஜைக்குத் தேவையான பொருட்களைச் சேகரிக்கும் நேரத்திலிருந்து, பூஜை முடியும் வரை இறை நாமங்களை ஜெபித்தபடி இருப்பது, பூஜையில் மனம் ஒன்றிச் செய்ய உதவும்.

மஞ்சள் பிள்ளையாரை, ஒரு சிறு வெற்றிலையில் அல்லது தட்டில் பிடித்து வைத்துக் கொள்ளவும்.

தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழத்தை ஒரு தாம்பாளத் தட்டில் வைக்கவும். பிள்ளையாருக்கு நிவேதனம் செய்யத் தேவையான வெற்றிலை, பாக்கு, பழத்தைத் தனியாக வைக்கவும்.

பூஜைக்குத் தேவையான,மலர்கள், அட்சதை முதலியவற்றைத் தனித் தனி தட்டுக்களில் வைக்கவும். சந்தனம், குங்குமம், உள்ளிட்ட பூஜைப் பொருட்களை கைக்கெட்டும் தூரத்தில் வைத்துக் கொண்டு, திருவிளக்கை நமஸ்கரித்து, பூஜைக்கு அமரவும்.

முதலில், பிரதான விளக்கிற்கு அருகிலிருக்கும் சிறு விளக்கை ஏற்றவும். பின், பிரதான விளக்கை, அந்த சிறு விளக்கைக் கொண்டோ, தீபக்காலைக் கொண்டோ ஏற்றவும். விளக்கு ஏற்றும் போது,'ஒளிவளர் விளக்கே போற்றி' என்று சொல்லிக் கொண்டே ஏற்றவும்.

மஞ்சள் பிள்ளையாரில், ஸ்ரீ விக்னேஸ்வரரை எழுந்தருளப் பிரார்த்தித்து, பூஜை எவ்வித விக்னமும் இன்றி நிறைவேற விக்னேஸ்வர பூஜையைச் செய்யவும். பிள்ளையாருக்கு, வெற்றிலை பாக்கு பழம் நிவேதனம் செய்யவும்.

பின், பிரதான விளக்கில், அம்பிகையை எழுந்தருளப் பிரார்த்திக்கவும். நம் உள்ளத்திலும் இல்லத்திலும் திருவிளக்கிலும் அம்பிகை எழுந்தருளி, நம் வாழ்வில் ஒளியேற்றப் பிரார்த்திக்கவும். பின், அம்பிகைக்கு உபசார பூஜைகள் செய்து, லக்ஷ்மி அஷ்டோத்திரம், ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம், திருவிளக்கு போற்றிகள் முதலியவற்றை, நேரம்,சௌகரியத்திற்கு தகுந்தபடி கூறி, குங்குமம், அட்சதை மற்றும் மலர்களால் அர்ச்சிக்கவும்.
பூஜை செய்வதற்கு, ஸ்ரீ லலிதா அஷ்டோத்திர சத நாமாவளிக்கு இங்கு சொடுக்கவும்.
ஊதுபத்தி ஏற்றிக் காட்டவும். ஒரு முக தீபத்தை(தீபக்கால்) ஏற்றிக் காட்டவும். பின்பு நிவேதனங்களை பக்தியுடன் சமர்ப்பிக்கவும். நிவேதனம் செய்யும் போது, எவ்வித நிவேதனமாக இருந்தாலும் 'அம்ருதமயமான இந்த நிவேதனத்தை உனக்குச் சமர்ப்பிக்கிறேன்(சர்வம் அம்ருதமயம் நிவேதயாமி)' என்று கூறி சமர்ப்பிக்கவும். தேங்காய் உடைத்து, வெற்றிலை, பாக்கு, பழத்துடன் நிவேதனம் செய்யவும். கற்பூரம் ஏற்றிக் காட்டவும். தூபம் முதலானவை காட்டும் பொழுது, எழுந்து நின்று உபசார பூஜைகளைச் செய்வது சிறந்தது.

முடிந்தால், திருவிளக்கைச் சுற்றி வந்து நமஸ்கரிக்கவும். இல்லையெனில், ஆத்மபிரதக்ஷிணமாக(தன்னைத் தானே சுற்றுதல்) செய்து திருவிளக்கை நமஸ்கரிக்கவும். கை நிறைய புஷ்பங்களை எடுத்து அம்பிகையின் பாதாரவிந்தங்களில் சமர்ப்பித்து நமஸ்கரிக்கவும்.

ஒரு தட்டில், மஞ்சள் குங்குமம் கலந்த நீரில், இரு சிறு நெய்தீபங்களை ஏற்றி வைத்து, திருவிளக்கிற்குக் காட்டவும். இந்த ஆரத்தி நீரை பூஜை முடிந்த பின் செடிகளுக்கு ஊற்றவும்.
பூஜையில் ஏற்பட்டிருக்கக் கூடிய குறைகளுக்காக அம்பிகையிடம் மானசீகமாக மன்னிப்புக் கோரவும். நமஸ்கரிக்கும் போது, தீபச்சுடரில் எழுந்தருளியிருக்கும் அம்பிகையுடன், மனமொழி மெய்யை இணைத்து, 'நீயே அனைத்தும்' என்று மானசீகமான சரணாகதியடைந்து நமஸ்கரிக்கவும். 'நீங்காத பக்தியை அருள்வாய்' என்று அம்பிகையிடம் மனமுருகி வேண்டவும்.

பூஜை முடிந்ததும், பூ, அக்ஷதையை திருவிளக்கின் பாதத்தில் இட்டு, தீபத்திலிருக்கும் அம்பிகையை தம் இடம் சேரப் பிரார்த்திக்கவும். பின் திருவிளக்கை, கிழக்காக நகர்த்தவும். பூஜைப் பிரசாதங்களை சிறிது உண்டுவிட்டு, மற்றவர்களுக்கும் விநியோகிக்கவும். சுமங்கலிகளுக்குத் தாம்பூலம் அளிப்பது சிறந்தது.

குத்துவிளக்கின் முத்துச் சுடரொளியில் அம்பிகை குடியிருக்கிறாள். நம்மைச் சுற்றிலும் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள், சக்திகளை அகற்ற வல்ல வலிமை தீப வழிபாட்டிற்கு உண்டு. இதை உணர்ந்து, உள்ளன்போடு தீப வழிபாடு செய்யச்செய்ய, வாழ்வில் நல்ல பல மாற்றங்கள் ஏற்படுவதைக் கண்கூடாகக் காணலாம்.

தீப வழிபாடு செய்து,அம்பிகையின் அருளால்
வெற்றி பெறுவோம்!!!


அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

4 கருத்துகள்:

  1. பலரும் பயன் பெரும் விஷயங்களை
    பலமாக எளிமையாக சொல்லும் உங்கள்

    பதிவை உளம் நிறைந்தபடி
    பாராட்டுகிறோம்..

    தேடு பொறியில் பதிவினை
    கோர்த்துக் கொள்ளுங்கள்..

    ஒரு மதம் சார்பானதாக இல்லாமல்
    ஒவ்வொரு மனிதனும் சார்ந்ததாக

    அமைந்து விட்டால்
    அத்தனை புன்னியமும் உங்களுக்கே


    வாழ்க.. நலமுடன்..
    வளர்க .. வளமுடன்..

    பதிலளிநீக்கு
  2. /////அய்யர் said...
    பலரும் பயன் பெரும் விஷயங்களை
    பலமாக எளிமையாக சொல்லும் உங்கள்

    பதிவை உளம் நிறைந்தபடி
    பாராட்டுகிறோம்/////

    தங்கள் வருகைக்கும் பாராட்டுதல்களுக்கும் மனமார்ந்த நன்றி. தங்கள் அறிவுரையைக் கட்டாயம் பின்பற்ற முயற்சிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. அம்பிகை குடிருக்கும் அருமையான திருவிளக்குப்பூஜை மிகவும் விளக்கமாகப் பகிர்ந்து
    மகிழ்ச்சியடைய வைத்துள்ளீர்கள்..

    அன்பான பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  4. ///// இராஜராஜேஸ்வரி said...
    அம்பிகை குடிருக்கும் அருமையான திருவிளக்குப்பூஜை மிகவும் விளக்கமாகப் பகிர்ந்து
    மகிழ்ச்சியடைய வைத்துள்ளீர்கள்..

    அன்பான பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..//////

    தங்கள் வருகைக்கும் பாராட்டுதல்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..